திருக்கச்சி நம்பியின் பிரசாதம்
காஞ்சிபுரத்தில் வரதராஜப் பெருமாளுக்கு ஆலவட்டக் கைங்கரியம் (விசிறி வீசும் தொண்டு) செய்துவந்தவர் திருக்கச்சி நம்பி. அவர் அந்தணர் குலத்தில் பிறந்தவர் அல்லர்; வணிகர் குலத்தவர். ஆனால் பெருமாளே அவரோடு நேரில் பேசுவான் என்று அவர் காலத்தில் எல்லாரும் போற்றினார்கள். இளைஞரான ராமானுஜர் அவரைத் தம் ஆசாரியராகவே மதித்தார்.
ஒருநாள் ராமானுஜர் நம்பியைத் தம் வீட்டுக்கு உணவுக்கு அழைத்தார். நம்பி உண்டு மீதம் வைக்கும் உணவை, அவரது பிரசாதமாகத் தாம் ஏற்க வேண்டும் என்பது ராமானுஜரின் ஆசை. அதை அறிந்த நம்பி, ராமானுஜர் வீட்டில் இல்லாத நேரத்தில் வந்து விரைவாக உண்டு சென்றுவிட்டார். ராமானுஜரின் மனைவி தஞ்சம்மாள் நம்பி உண்ட இடத்தைச் சுத்தம் செய்து, மீதமிருந்த உணவை வேலைக்காரிக்குக் கொடுத்துவிட்டு, தானும் நீராடினாள். திரும்பி வந்த ராமானுஜர் இதைக் கேட்டு மிகவும் வருந்தினார். ஒரு பெரிய அடியாரின் பிரசாதத்தை இழந்துவிட்டோமே என்று.
இந்த நிகழ்ச்சியின் பின்னால் இருக்கும் கருத்தைத் தொண்டரடிப்பொடி ஆழ்வார் திருமாலையில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பாடியிருந்தார். 'இழிகுலத்தவர்களேலும் எம்மடியார்களாகில் தொழுமின், கொடுமின், கொள்மின்' (913): எந்தக் குலத்தில் பிறந்தாலும் அடியார்களை வணங்குங்கள், அவர்களுக்குக் கொடுங்கள், அவர்களிடமிருந்து பெறுங்கள். 'போனகம் செய்த சேடம் தருவரேல் புனிதம் அன்றே?' (912): அடியார்கள் உண்ட மீதத்தைத் தந்தால் அது புனிதம் அல்லவா?
வைணவத்தில் ஒருவரின் பெருமை பிறப்பால் அல்ல, இறைவனிடம் அவருக்கு உள்ள அன்பால் அளக்கப்படுகிறது. ராமானுஜர் தம் வாழ்நாள் முழுவதும் இந்தக் கொள்கையைக் கடைப்பிடித்தார். திருமாலையின் இந்த இறுதிப் பகுதி ஆழ்வாரின் மனமுருகிய சரணாகதியையும், அடியார்களின் பெருமையையும் பாடுகிறது.