பாரதம் எழுதிய பிள்ளையார்
மகாபாரதத்திலிருந்து. வியாச முனிவர் பாரதக் கதையை முழுவதும் தம் மனத்தில் அமைத்து முடித்தார். ஆனால் அந்தப் பெரிய காவியத்தை யார் எழுதுவது? பிரமனின் அறிவுரைப்படி அவர் விநாயகப் பெருமானை வேண்டினார்.
விநாயகர் ஒரு நிபந்தனை விதித்தார்: "நான் எழுதத் தொடங்கினால் என் எழுத்தாணி நிற்கக் கூடாது. நீங்கள் இடையில் நிறுத்தினால் நான் எழுதுவதை விட்டு விடுவேன்." வியாசரும் ஒரு நிபந்தனை வைத்தார்: "நான் சொல்லும் ஒவ்வொரு சுலோகத்தின் பொருளையும் புரிந்துகொண்ட பின்தான் நீங்கள் எழுத வேண்டும்."
இப்படி இருவரும் தொடங்கினர். வியாசர் இடையிடையே ஆழ்ந்த பொருளுடைய சுலோகங்களைச் சொல்வார்; விநாயகர் அவற்றைச் சிந்திக்கும் நேரத்தில் அடுத்த பகுதியை அமைத்துக் கொள்வார். எழுதும்போது எழுத்தாணி உடைந்தபோது, விநாயகர் தயங்காமல் தம் தந்தத்தையே ஒடித்து எழுதினார் என்றும் மரபு சொல்கிறது. அதனால்தான் எந்தப் பெரிய பணியைத் தொடங்கும் முன்னும், எந்த நூலைப் பாடும் முன்னும் விநாயகரை வணங்குகிறோம்.