கம்பர் மண்டபமும் மேட்டழகிய சிங்கரும்
திருவரங்கக் கோயில் மரபிலிருந்து. கம்பர் இராமாவதாரத்தை அரங்கேற்ற வந்தபோது, அதை ஏற்கும் முன் வைணவப் பெரியவர்கள் பல சோதனைகள் வைத்தனர் என்று மரபு சொல்கிறது. அரங்கன் சந்நிதிக்கு எதிரே உள்ள மண்டபத்தில் அரங்கேற்றம் நடந்தது; அதுவே இன்றைய "கம்பர் மண்டபம்".
யுத்த காண்டத்துக்கு முன் வரும் இரணியன் வதைப் படலத்தைக் கம்பர் பாடியபோது, அதைச் சேர்க்கலாமா என்று சிலர் ஐயம் எழுப்பினர்; வால்மீகியில் அது இல்லையே. அப்போது அருகிலுள்ள மேட்டழகிய சிங்கர் சந்நிதியிலிருந்து நரசிங்கப் பெருமான் பெருமுழக்கம் செய்து ஏற்பைக் காட்டினார் என்பது மரபு. அந்தச் சந்நிதி இன்றும் கம்பர் மண்டபத்துக்கு அருகே உள்ளது.
அதே அரங்கேற்றத்தில்தான் அரங்கனின் கேள்வி எழுந்தது: "நம் சடகோபனைப் பாடினையோ?" இந்தப் பாயிரம் அந்தக் கேள்வியைப் பதிவு செய்கிறது. கம்பர் அதற்கு எப்படி விடை தந்தார், அதிலிருந்து அவர் உணர்ந்தது என்ன என்பது நூறாம் பாடலோடு சொல்லப்படுகிறது.