இராமலிங்க அடிகள் 1823 அக்டோபர் 5 அன்று சிதம்பரத்துக்கு அருகே மருதூரில் இராமையா பிள்ளை, சின்னம்மை தம்பதியருக்குப் பிறந்தார். சென்னையில் வளர்ந்த அவர், பள்ளிக் கல்வி பெரிதும் இல்லாமலேயே, இளம் வயதில் கந்தகோட்டத்து முருகனைப் பாடத் தொடங்கினார்.
"வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்" என்று பாடிய அவர், எல்லா உயிர்களிடத்தும் இரக்கம் காட்டுவதே (சீவகாருண்யம்) இறைவனை அடையும் வழி என்றார். 1867இல் வடலூரில் சத்திய தருமச்சாலையைத் தொடங்கிப் பசித்தவர்களுக்கு உணவளித்தார்; அன்று மூட்டிய அடுப்பு இன்றும் அணையாமல் எரிகிறது. 1872இல் சத்திய ஞான சபையை நிறுவி, இறைவனை அருட்பெருஞ்ஜோதியாக வழிபடச் செய்தார்.
அவருடைய பாடல்கள் ஆறு திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டுத் திருவருட்பா என்று போற்றப்படுகின்றன. ஆறாம் திருமுறையில் உள்ள அருட்பெருஞ்ஜோதி அகவல் 1596 அடிகள் கொண்டது. 1874 ஜனவரி 30 அன்று மேட்டுக்குப்பத்தில் தம் அறைக்குள் சென்று கதவை அடைத்துக்கொண்ட அவர், பின் காணப்படவில்லை.