Ezhuthathikaram · Uyir Mayangiyal · Verse 22 of 93
தொல்காப்பியம் 228 · உயிர்மயங்கியல்
ஆவும் மாவும் விளிப்பெயர்க் கிளவியும்யா என் வினாவும் பலவற்று இறுதியும்ஏவல் குறித்த உரையசை மியாவும்தன் தொழில் உரைக்கும் வினாவின் கிளவியொடுஅன்றி அனைத்தும் இயல்பு என மொழிப.
விளக்கம்
இஃது எய்தியது விலக்கலும் எய்தாத தெய்துவித்தலும் உணர்த்துகின்றது.
இ - ள்: ஆவும்--ஆவென்னும் பெயரும், மாவும்--மாவென்னும் பெயரும், விளிப்பெயர்க் கிளவியும்--விளித்தலை யுடைய பெயராகிய உயர்திணைச் சொல்லும், யாவென் வினாவும்--யாவென்னும் வினாப்பெயரும், பலவற்று இறுதியும்--பன்மைப் பொருளை உணர்த்தும் ஆகார ஈற்றுப் பெயரெச்ச மறையாகிய முற்றுவினைச்சொல்லும், ஏவல் குறித்த உரையசை மியாவும்--முன்னிலை யேவல் வினையைக் கருதிவரும் எதிர்முகமாக்குஞ் சொல்லினைச் சேர்ந்த மியாவென்னும் ஆகார ஈற்று இடைச்சொல்லும், தன்தொழில் உரைக்கும் வினாவின் கிளவியொடு-- தனது தொழிலினைச் சொல்லும் ஆகார ஈற்றுத் தன்மையாகிய வினாச் சொல்லோடு கூட, அன்றி யனைத்தும்--அவ் வெழு வகையாகிய சொல்லும், இயல்பென மொழிப-- இயல்பாய் முடியுமென்று சொல்லுவர் புலவர்; எ - று.
எ - டு: ஆகுறிது மாகுறிது சிறிது தீது பெரிது குறிய சிறிய தீய பெரிய என ஒட்டுக. இஃது ஆகார ஈற்றுப் பெயராகலின் மிக்கு முடிவன மிகாவென எய்தியது விலக்கிற்று. ஊராகேள் செல் தா போ என இஃது இயல்பாமென்ற உயர்திணைப் படர்க்கைப் பெயர் திரிந்து முன்னிலையாய் விளியேற்றலின் எய்தாத தெய்துவித்தது. யா குறிய சிறிய தீய பெரிய என இதுவும் பெயராகலின் எய்திய இயைபு வல்லெழுத்து விலக்கியதாம். உண்ணா குதிரைகள் செந்நாய்கள் தகர்கள் பன்றிகள் என இஃது எய்தியது விலக்கிற்று, செய்யா வென்னுஞ் சூத்திரத்து உம்மையாற் பெற்ற வல்லெழுத்தினை விலக்கலின். கேண்மியா கொற்றா சாத்தா தேவா பூதா எனவும், உண்கா கொற்றா சாத்தா தேவா பூதா எனவும் இவ்விடைச் சொற்கள் முடியாமையின் எய்தாத தெய்துவித்ததுமாம். உண்கா என்பது யானுண்பேனோ என்னும்பொருட்டு. இயல்பு கணத்துக் கண்ணாயின் 'ஞ ந ம ய வ' (எழு - 144) என்பதனான் முடிபெய்தும். (22)