Ezhuthathikaram · Uyir Mayangiyal · Verse 48 of 93
தொல்காப்பியம் 254 · உயிர்மயங்கியல்
நீ என் பெயரும் இடக்கர்ப் பெயரும்மீ என மரீஇய இடம் வரை கிளவியும்ஆவயின் வல்லெழுத்து இயற்கை ஆகும்.
விளக்கம்
இஃது எய்தியது விலக்கலும் எய்தாத தெய்துவித்தலுங் கூறுகின்றது.
இ - ள்: நீ என் பெயரும் இடக்கர்ப் பெயரும் -- நீ யென்னும் பெயரும் இடக்கர்ப் பெயராகிய ஈகார ஈற்றுப்பெயரும், மீயென மரீஇய இடம் வரை கிளவியும் -- மீயென்று சொல்ல மருவாய் வழங்கின ஓரிடத்தை வரைந்து உணர்த்துஞ் சொல்லும், ஆவயின் வல்லெழுத்து இயற்கை யாகும் -- புணருமிடத்து முற்கூறிய வல்லெழுத்துப் பெறாது இயல்பாய் முடியும்; எ - று.
எ - டு; நீகுறியை சிறியை தீயை பெரியை எனவும், பீகுறிது சிறிது தீது பெரிது எனவும் இவையிவற்றுக்குப் பொதுவான் எய்திய வல்லெழுத்து விலக்குண்டன. மீகண் செவி தலை புறம் இஃது இலக்கணத்தோடு பொருந்திய மருவாதலின் எய்தாத தெய்துவித்தது.
நீயென்பது அஃறிணை விரவுப்பெயருள் அடங்காதோ வெனின் மேல் நின்கை யெனத் திரிந்து முடிதலின் அடங்காதாயிற்று. மீகண் என்பது மேலிடத்துக் கண்ணென வேற்றுமை யெனினும் இயல்புபற்றி உடன் கூறினார். (48)