நூற்பா 230 · தொல்காப்பியம் · தொல்காப்பியர்

எழுத்ததிகாரம் · உயிர்மயங்கியல் · பாடல் 24 / 93

தொல்காப்பியம் 230 · உயிர்மயங்கியல்

குறியதன் முன்னரும் ஓரெழுத்து மொழிக்கும்அறியத் தோன்றும் அகரக் கிளவி.
பகிர்

விளக்கம்

இஃது அவ் வீற்றிற்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது, அகரமும் வல்லெழுத்தும் பெறுதலின்.

இ - ள்: குறியதன் முன்னரும் -- குற்றெழுத்தின் முன்னின்ற ஆகார ஈற்றிற்கும், ஓரெழுத்து மொழிக்கும் -- ஓரெழுத் தொரு மொழியாகிய ஆகார ஈற்றிற்கும், அகரக்கிளவி அறியத் தோன்றும் -- நிலைமொழிக்கண் அகரமாகிய எழுத்து விளங்கத் தோன்றும்; எ - று.

எ - டு: பலா அக்கோடு செதிள் தோல் பூ எனவும், காஅக்குறை செய்கை தலை புறம் எனவும் வரும். ஓரெழுத் தொருமொழி அகரம் பெறுதல் சிறுபான்மை யென்றற்கு அதனைப் பிற்கூறினார். இது நிலைமொழிச் செய்கையாதலிற் பலாஅவிலை பலாஅநார் என இயல்பு கணத்துங் கொள்க. அறிய என்றதனான் அவ் வகரம் ஈரிடத்தும் பொருந்தினவழிக் கொள்க.

இன்னும் இதனானே அண்ணாஅத்தேரி திட்டாஅத்துக்குளம் என அத்துக் கொடுத்தும், உவாஅத்து ஞான்று கொண்டான் என அத்தும் ஞான்றுங் கொடுத்தும், உவாஅத்தாற்கொண்டான் என அத்தும் ஆனுங் கொடுத்தும் இடாவினுட் கொண்டான் என இன்னும் ஏழனுருபுங் கொடுத்துஞ் செய்கை செய்து முடிக்க.

இன்னும் இதனானே மூங்காவின்கால் மூங்காவின்றலை என உருபிற்குச் சென்ற சாரியை பொருட்கட் சென்றுழி இயைபு வல்லெழுத்துக் கேடுங் கொள்க. (24)