நூற்பா 271 · தொல்காப்பியம் · தொல்காப்பியர்

எழுத்ததிகாரம் · உயிர்மயங்கியல் · பாடல் 65 / 93

தொல்காப்பியம் 271 · உயிர்மயங்கியல்

குற்றெழுத்து இம்பரும் ஓரெழுத்து மொழிக்கும்நிற்றல் வேண்டும் உகரக் கிளவி.
பகிர்

விளக்கம்

இஃது இயைபு வல்லெழுத்தினோடு உகரம் வகுத்தலின் எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது.

இ -ள்: குற்றெழுத்து இம்பரும் – குற்றெழுத்தின்பின் வந்த ஊகார ஈற்று மொழிக்கும், ஓரெழுத்து மொழிக்கும் -- ஓரெழுத் தொருமொழியாகிய ஊகார ஈற்று மொழிக்கும், உகரக் கிளவி நிற்றல் வெண்டும் -- உகரமாகிய எழுத்து நிற்றலை விரும்பும்

ஆசிரியன்; எ - று.

எ - டு: உடூஉக் குறை செய்கை தலை புறம் எனவும், தூஉக்குறை செய்கை தலை புறம் எனவும் வரும்.

நிற்றல் என்றதனான் உயர்திணைப் பெயர்க்கும் வல்லெழுத்தும் உகரமுங் கொடுக்க. ஆடுஉக்கை மகடூஉக்கை செவி தலை புறம் என வரும். இவை தொகைமரபினுள் இயல்பாதல் எய்தியவற்றை1 ஈண்டு இருவழிக்கண்ணும் முடித்தார், ஈற்றுப் பொது ஒப்புமை கண்டு. (65)

1 இயல்பாதல் எய்தியவற்றை -- தொகைமரபினுள் 11 - ம் நூற்பாவில் 'எல்லா வழியும்

இயல்பென மொழிப' என்ற விதியால் இயல்பானவற்றை.