நூற்பா 239 · தொல்காப்பியம் · தொல்காப்பியர்

எழுத்ததிகாரம் · உயிர்மயங்கியல் · பாடல் 33 / 93

தொல்காப்பியம் 239 · உயிர்மயங்கியல்

இகர இறுதிப் பெயர்நிலை முன்னர்வேற்றுமை ஆயின் வல்லெழுத்து மிகுமே.
பகிர்

விளக்கம்

இஃது இகர ஈற்றுப் பெயர்க்கு அல்வழி முடிபுதொகைமரபிற் கூறி ஈண்டு வேற்றுமை முடிபு கூறுகின்றது.

இ - ள்: இகர இறுதிப் பெயர்நிலை முன்னர் -- இகர ஈற்றுப் பெயர்ச்சொன் முன்னர் அதிகாரத்தாற் கசதப முதன்மொழி வந்துழி, வேற்றுமையாயின் வல்லெழுத்து மிகும் -- வேற்றுமைப் பொருட்புணர்ச்சியாயின் தமக்குப் பொருந்தின வல்லெழுத்து மிக்கு முடியும்; எ - று.

எ - டு: கிளிக்கால் சிறகு தலை புறம் என வரும். புலி நரி என்றாற் போல்வனவும் அவை.

இனிக் கிளி குறுமை கிளிக் குறுமை எனக் குணம்பற்றி வந்த உறழ்ச்சி முடிபு மேல் 'வல்லெழுத்து மிகினும்' (எழு - 246) என்னுஞ் சூத்திரத்து 'ஒல்வழி யறிதல்' என்பதனாற் கொள்க. (33)