நூற்பா 243 · தொல்காப்பியம் · தொல்காப்பியர்

எழுத்ததிகாரம் · உயிர்மயங்கியல் · பாடல் 37 / 93

தொல்காப்பியம் 243 · உயிர்மயங்கியல்

பதக்கு முன் வரினே தூணிக் கிளவிமுதல் கிளந்து எடுத்த வேற்றுமை இயற்றே.
பகிர்

விளக்கம்

இஃது இவ்வீற்று அல்வழிகளுள் அளவுப்பெயருள் ஒன்றற்குத் தொகை

மரபினுள் எய்திய ஏயென் சாரியை விலக்கி வேறு முடிபு கூறுகின்றது.

இ - ள்: தூணிக் கிளவிமுன் பதக்கு வரின் – தூணியாகிய அளவுப்பெயரின் முன்னர்ப் பதக்கு என்னும் அளவுப்பெயர் வருமாயின், முதற் கிளந்து எடுத்த வேற்றுமை இயற்று -- முன்பு விதந்தெடுத்த வேற்றுமை முடிபின் இயல்பிற்றாய் வல்லெழுத்து மிக்கு முடியும்; எ - று.

எ - டு: தூணிப்பதக்கு என வரும். இஃது உம்மைத் தொகை.

வருமொழி முற்கூறிய வதனான் அடையொடு வந்துழியும் இவ் விதி கொள்க. இரு தூணிப் பதக்கு முத்தூணிப் பதக்கு என ஒட்டுக. கிளந்தெடுத்த வென்றதனால் தூணிக்கொள் சாமை தோரை பாளிதம் எனப் பொருட்பெயர் முன் வந்துழியும், இரு தூணிக்கொள் என அதுதான் அடையடுத்துழியுந், தூணித்தூணி தொடித்தொடி காணிக்காணி பூணிப்பூணி எனத் தன் முன்னர்த் தான் வந்துழியும் இவ் விதி கொள்க.

இன்னும் இதனானே தன் முன்னர்த் தான் வந்துழியும் அதுதான் அடையடுத்து வந்துழியும் இக்குச்சாரியை பெறுதலுங் கொள்க. தூணிக்குத் தூணி இரு தூணிக்குத் தூணி என வரும். இவற்றுட் பண்புத்தொகையும் உள.(37)