எழுத்ததிகாரம் · உயிர்மயங்கியல் · பாடல் 56 / 93
தொல்காப்பியம் 262 · உயிர்மயங்கியல்
அன்று வரு காலை ஆ ஆகுதலும்ஐ வரு காலை மெய் வரைந்து கெடுதலும்செய்யுள் மருங்கின் உரித்து என மொழிப.
விளக்கம்
இஃது இவ் வீற்றுச் சுட்டுமுதற் பெயர்க்கு ஓர் செய்யுண்முடிபு கூறுகின்றது.
இ - ள்: அன்று வருகாலை ஆஆகுதலும் -- அதிகாரத்தால் நின்ற சுட்டு முதல் உகர ஈற்றின் முன்னர் அன்றென்றும் வினைக்குறிப்புச்சொல் வருங்காலத்து அத் தகரவொற்றின்மேல்* ஏறி நின்ற உகரம் ஆகாரமாய்த் திரிந்து முடிதலும், ஐ வருகாலை மெய் வரைந்து கெடுதலும் -- அதன் முன்னர் ஐயென்னுஞ் சாரியை வருங்காலத்து அத் தகரவொற்று நிற்க அதன்மேல் ஏறிய உகரங் கெடுதலும், செய்யுண் மருங்கின் உரித்தென மொழிப--செய்யுட் கண் உரித்தென்று சொல்லுவர் ஆசிரியர; எ - று.
எ - டு: அதாஅன்றம்ம இதாஅன்றம்ம உதாஅன்றம்ம 'அதாஅன்றென்ப வெண்பா யாப்பே' எனவும், அதைமற்றம்ம இதைமற்றம்ம உதைமற்றம்ம எனவும் வரும்.
மொழிந்த பொருளோடொன்ற வவ்வயின் முடியாததனை முட்டின்றி முடித்த லென்பதனால் அதன்று இதன்று உதன்று என உகரங்கெட்டுத் தகரவொற்று நிற்றல் கொள்க. (56)